மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இருக்கும் ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன். இவரது மகன் பாண்டி(23). வெல்டிங் தொழிலாளியான இவர் கோவையில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக பாண்டி ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், வெகுநேரமாக வீட்டிற்கு வரவில்லை.

இந்த நிலையில் குலசேகரன்கோட்டை கோம்பை கரடு பகுதியில் இருக்கும் கண்மாய் அருகே வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அது பாண்டி என்பது தெரிய வந்தது. பாண்டியின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டும் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தார்.

அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு காவலர்கள் அனுப்பி வைத்தனர். கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் வாடிப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் குடிபோதையில் நடந்த தகராறில் பாண்டி கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் நண்பர்கள் 6 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.