கொடுத்த கடனை திரும்பப்பெற, மனைவியை காதலி போல் பேசி பழகவிட்டு, இளைஞரை நூதன முறையில் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
 
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருபவர் போரூரை சேர்ந்த சதீஷ் குமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது உடன் பணியாற்றிய தனது நண்பரான நந்தகுமாரிடம் ரூ.34,000 கடனாக பெற்றுள்ளார். பின்னர் சென்னை திரும்பியதும் சதீஷ் குமாரிடம், நந்தகுமார் பலமுறை பணம் கேட்டும் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நந்தகுமார், தனது சகோதரர் அஜித்குமாரிடம் கூறியுள்ளார்.

ஆனால், அஜித்குமாரின் அழைப்புகளையும் சதீஷ் எடுக்கவில்லை. இதனால் பணத்தை திருப்பி பெறுவதற்கு சதித்திட்டம் தீட்டிய அஜீத், தனது மனைவி இந்துமதியை அவரது வாட்ஸ் அப் எண் மூலம், சதீஷ்குமாரிடம் காதலி போல் பேசவிட்டுள்ளார். இருவரும் ஒருவாரம் பேசிய நிலையில், இந்துமதியை சந்திக்கவேண்டும் என்று சதீஷ்குமார் கூறியுள்ளார். அவரும் போரூரில் சந்திக்கலாம் என கூறி இருக்கிறார். அதனை அடுத்து, உறவினர் பிரகாசையும் உடன் அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து மனைவியின் உதவியுடன் சதீஷ்குமாரை போரூர் வரவழைத்த அஜீத்தும், அவரது நண்பர் ராகுலும், லாவகமாக அவரை கடத்திச் சென்றனர்.

இதுகுறித்து பிரகாஷ் அளித்த புகாரில், உதவி கமிஷனர் பாபு தலைமையில் சதிஷ்குமாரை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. செல்போன் சிக்னலை வைத்து வேலூரில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சதீஷ் குமாரை மீட்டனர். இதனையடுத்து அஜீத்தும், ராகுலும் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு உதவுவதற்கு காதல் நாடகமாடிய இந்துமதியை போலீசார் தேடி வருகின்றனர். பணத் தகராறில் மனைவியை காதலியாக நடிக்க வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.