65 வயது மூதாட்டியை கொன்று.. சதையை சாப்பிட்ட இளைஞர்.. மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்
65 வயது மூதாட்டியை கொன்று, அவரின் சதையை சாப்பிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் மூதாட்டியை கொன்று, உடலை சாப்பிட்ட 24 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹைட்ரோபோபியா என்ற நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளியை அதிகாரிகள் காவலில் எடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் மும்பையைச் சேர்ந்த சுரேந்திர தாக்கூர் என்பது தெரியவந்துள்ளது. சுரேந்திர தாக்கூர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் நரமாமிசம் உண்ணும் குற்றச்சாட்டையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை செந்திரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாரதானா கிராமத்தில் நடந்தது. 65 வயதான சாந்தி தேவி, தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, சுரேந்திர தாக்குர் அவரை கல்லால் தாக்கி கொன்றதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில், குற்றவாளியைக் கண்டு உள்ளூர்வாசிகள் பயந்தனர், ஆனால் அவர் தப்பிக்க முயன்றபோது அவர்கள் அவரை துரத்திச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க :
குற்றவாளியை நேரில் பார்த்த சாட்சியான கதாட் இதுகுறித்து பேசிய போது "நான் ஆடு மேய்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இறந்த பெண்ணின் சதையை தின்று கொண்டிருந்தவனைப் பார்த்தேன். நான் பயந்து அந்த இடத்தை விட்டு ஓடினேன்" என்று கூறினார்.
காவல்துறை அதிகாரி ஜெய்தரண் இதுகுறித்து பேசிய போது“குற்றம் சாட்டப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவும், ஆக்ரோஷமாகவும் நடந்து கொள்கிறார். மருத்துவப் பரிசோதனை நடக்கும் மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். மருத்துவமனையில் கூட அவர் பிரச்சனையில் ஈடுபட்டார். அவரை ஊழியர்கள் கட்டிப்போட்டு வைத்துள்ளனர்.
சுரேந்திர தாக்குர் "ஹைட்ரோபோபியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்" என்று பாங்கர் மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய மருத்துவர் பிரவீன் "ஹைட்ரோபோபியாவால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி பங்கார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை வெறிநாய் கடந்த காலத்தில் கடித்திருக்க வாய்ப்புள்ளது. தடுப்பூசி போடாமல் இருந்திருக்கலாம். இதனால் அவருக்கு ஹைட்ரோஃபோபியா அல்லது ரேபிஸ் வந்திருக்கலாம்" என்று கூறினார். இதனிடையே, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பெண்ணின் உடலை போலீஸார் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.