விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமல நாச்சியார்புரத்தைச் சேர்ந்த அருணாச்சலப்பாண்டி. இவருக்கு சுப்பு  என்ற மனைவியும், பிரபா என்ற 7 வயது மகனும் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையான அருணாச்சலம் கடந்த 6 ஆண்டுகளாக தன் மனைவி மற்றும் மகனை விட்டுப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். அருணாச்சலம் வேலைக்குச் செல்லாமல் மது அருந்தியும், ஊர் சுற்றியும் வந்துள்ளார். மேலும், அவர் தன் தாய் ஈஸ்வரியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு மது அருந்த பணம் கேட்டு தன் அம்மா ஈஸ்வரியுடன் தகராறு செய்துள்ளார். ஆனால், மது அருந்த ஈஸ்வரி பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருணாச்சலம் தன் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு இரவு முழுவதும் தானும் தாயின் சடலத்துடனேயே வீட்டுக்குள் தூங்கியுள்ளார். 

இத்தனையடுத்து அவரது  அப்பா சின்னகணபதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு ஈஸ்வரி கொலை செய்யப்பட்டுக் கிடப்பது பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்,  இதுகுறித்து சின்னகணபதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருத்தங்கல் காவல்துறையினர் கொலை செய்த மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.