மதுரை புதூரை அருகேயுள்ள பரசுராம்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி.  இவர், தனது தாய் இந்திராணி மற்றும் வள்ளி என்ற  உறவினர் உட்பட 10 பேருடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.

இதற்காக அவர்கள் நேற்று முன்தினம் மதுரையில் இருந்து விழுப்புரம் செல்லும் ரெயிலில் ஏறினர். அந்த ரெயில் திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு ரெயில் நிலையத்திற்கு நேற்று அதிகாலை சுமார் 4 மணிக்கு வந்தது. கொடைரோடு ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டது. 

அப்போது வள்ளி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை மர்ம நபர் பறித்து கொண்டு தப்பியோடினார். இதனை பார்த்த பாலாஜி அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றார். உடனே அந்த மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடினார்.

அவரை பிடிப்பதற்கு பாலாஜியும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்தார். ரெயிலில் இருந்த அவருடைய தாய் மற்றும் உறவினர்கள் பாலாஜிக்கு என்ன ஆனது என்று பதறி துடித்தனர். அதற்குள் அந்த ரெயில் கொடைரோடு ரெயில் நிலையத்தை கடந்தது.

இதுகுறித்து கொடைரோடு ரெயில்வே போலீசாருக்கு பாலாஜியின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் கொடைரோடு ரெயில் நிலையத்தில் தேடினர். அப்போது ரெயிலில் அடிபட்டு உடல் துண்டாகி பாலாஜி இறந்து கிடந்தார். அவருடைய உடலை போலீசார் மீட்டனர். இதுகுறித்து போலீசார் அவருடைய உறவினரின் செல்போனுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதற்குள் அந்த ரெயில் அம்பாத்துறை ரெயில் நிலையத்திற்கு வந்தது. உடனே அவர் கள் அங்கு இருந்து கார் மூலம் கொடைரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தனர். ரெயிலில் அடிபட்டு பாலாஜி இறந்து கிடப்பதை பார்த்து அவருடைய தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இது குறித்த விசாரணையில், வள்ளி கழுத்தில் அணிந்திருந்தது கவரிங் சங்கிலி என்பது தெரியவந்தது. தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இறந்த பாலாஜி பேன்சி ஸ்டோர் கடை வைத்துள்ளார். அவருக்கு கண்ணகி என்ற மனைவி உள்ளார்.