புதுவையையொட்டி விழுப் புரம் மாவட்டம் ஆரோவில் அருகே குயிலாப்பாளையம் - பொம்மையார்பாளையம் ரோட்டில் ஒரு முந்திரிக்காடு அருகே கடந்த 30-ந் தேதி அரை குறையாக தீயில் எரிந்த நிலையில் ஒரு இளம் பெண் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்  கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில்  எரித்துக் கொல்லப்பட்ட லட்சுமி மனோரஞ்சிதம்  என்பவரின் மகள் என்றும் அவர்  தனது 3 மகள்கள், 3 மகன்களுடன் கூனிமேடு கிராமத்தில் வசித்து வந்துள் ளார்.

மனோரஞ்சிதத்தின் மகள்ககளில் ஒருவரான லட்சுமி புதுச்சேரி நேருவீதியில் உள்ள ஒரு பாத்திரக் கடையில் வேலை பார்த்து உள்ளார். அப்போது புதுச்சேரி கென்னடி நகரை சேர்ந்த மினிவேன் டிரைவர் அருண்குமார் என்ற அருண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 29-ந் தேதி வழக்கம்போல் பாத்திரக் கடைக்கு வேலைக்கு சென்ற லட்சுமி அதன்பிறகு மீண்டும் வீடு திரும்ப வில்லை.

இதனால் லட்சுமியை அவரது தாயாரும், சகோதரர் களும் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் லட்சுமி எரித் துக்கொல்லப்பட்டது தெரிய வந்தது.

இதில் துப்பு துலங்கியதை யடுத்து லட்சுமியின் காதலன் அருண் என்ற அருண்குமாரை பிடித்து போலீசார் விசாரித் தனர். விசாரணையில் தனது நண்பருடன் சேர்ந்து லட்சு மியை எரித்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

சம்பவத்தன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த லட்சுமியை, அருண்குமார் சந்தித்து உன்னிடம் பேச வேண்டும் என்று கூறி அழைத்து சென்றார். அப் போது கோட்டக்குப்பத்தில் தன்னுடைய நண்பர் அப்துல் ரகீமை போனில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட இடத் துக்கு வருமாறு கூறி அழைத் துள்ளார்.

இந்த சந்திப்பின்போது லட்சுமி, ‘நாம் இருவரும் பழகி யதில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், எனவே உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்றும் வற்புறுத்தி யுள்ளார். அதற்கு அருண், நான் கடந்த சில நாட்களாக உன்னை சந்திக்கவே இல்லை, எனவே கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை என்று கூறி திருமணத்துக்கு மறுத்துள்ளார்.

இந்த பிரச்சினையில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அருண் லட்சுமியை ஓங்கி அடித்துள்ளார். இதில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார்.

இதைப்பார்த்ததும் பயந்து போன அருணும் அவருடைய நண்பர் அப்துல் ரகீமும் மோட்டார் சைக்கிளின் நடுவில் லட்சுமியை தூக்கி வைத்துக் கொண்டு பொம்மை யார் பாளையம் - குயிலாப் பாளையம் ரோட்டில் உள்ள முந்திரிக்காட்டு பகுதிக்கு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவத்தில் அவரது காதலன் உள்பட 2 பேரை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.