நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இருக்கிறது குருசாமிபாளையம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் தனம். இவரது மகள் விஜயா. இவரும் தர்மபுரியைச் சேர்ந்த சாமுவேல் என்பவரும் நெருங்கி பழகியுள்ளனர். இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய பந்தம் இருந்ததாக அப்பகுதியினர் கூறுகின்றனர். இதனிடையே விஜயாவின் சகோதரி மகளான வசந்தி மீது சாமுவேலுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதையறிந்த விஜயா சாமுவேலை கண்டித்துள்ளார்.

ஆனாலும் சாமுவேல் வசந்தியை தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் குருசாமிபாளையத்தில் இருக்கும் தனத்தின் வீட்டில் கொண்டு வசந்தியை, விஜயா தங்க வைத்துள்ளார். அங்கு சென்று வசந்தியை கடத்த சாமுவேல் திட்டமிட்டுள்ளார். அதற்காக ஆசிட் மற்றும் கத்தியுடன் சென்ற அவர் தனத்துடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சாமுவேல் ஆசிட்டை தனத்தின் மீது வீசியுள்ளார். அதில் படுகாயமடைந்த அவர் அலறி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சத்தம் கேட்டு வந்த அக்கபக்கத்தினர் சாமுவேலை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவர் மயங்கி விழுந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் தாக்குதலில் சாமுவேல் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.