மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த  தென்னரசு அதே பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவருடைய மனைவி விஜயலட்சுமி . இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 15-ந்தேதி வீட்டில் தூங்கிய தென்னரசு படுக்கையில் பிணமாக கிடந்ததாக கூறி, அவரது மனைவி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தென்னரசுவின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து சிந்தாமணியை அடுத்த பனையூர் பகுதியில் தென்னரசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறப்பு குறித்து போலீசார் சந்தேக மரணம் என்று மட்டும் வழக்குபதிவு செய்தனர். ஆனால் தென்னரசுவின் பெற்றோரும், உறவினர்களும் அவரது சாவில் மர்மம் உள்ளது என்று போலீசில் புகார் செய்தனர். 

இதற்கிடையே தென்னரசு உடல் பரிசோதனை அறிக்கையில், அவரது கழுத்து பகுதி இறுக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து உஷாரான போலீசார், அவரது மனைவி விஜயலட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தென்னரசுவை அவர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தென்னரசுவின் ஒர்க்ஷாப்பில் கார் டிரைவராக சரவணக்குமார் என்பவர் வேலை பார்த்தார். அந்த சமயத்தில் அவருக்கும், தென்னரசுவின் மனைவி விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த விஷயம் தென்னரசுவுக்கு தெரிந்து, 2 பேரையும் அவர் கண்டித்துள்ளார். 

இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விஜயலட்சுமி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். சமீபத்தில் தான் அவர் மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

சரவணக்குமாருடனான தொடர்பை துண்டிக்கும் வகையில் தென்னரசு ஜெய்ஹிந்த்புரத்திலேயே வேறொரு பகுதிக்கு சென்று தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்துள்ளார்.

இருந்தாலும் அவருக்கும், டிரைவர் சரவணக்குமாருக்கும் இடையிலான பழக்கம் தொடர்ந்து வந்தது. ஆனால் அவர்களது கள்ளக்காதலுக்கு தென்னரசு இடையூறாக இருந்ததாக கருதி, அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி சம்பவத்தன்று இரவு தென்னரசுவை அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளனர். 

இதனால் அவர் மயக்கநிலைக்கு சென்றுவிட்டார். பின்னர் அவரது கழுத்தை இறுக்கி இருவரும் கொலை செய்துள்ளனர். ஆனால் மறுநாள், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், நோய் முற்றியதால்தான் தென்னரசு இறந்ததாகவும் கூறி விஜயலட்சுமி உறவினர்களிடம் நாடகமாடி உள்ளார். தீவிர விசாரணைக்கு பின்னர் விஜயலட்சுமியையும், அவருடைய கள்ளக்காதலன் சரவணக்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.