மணிகண்டன்தான் லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவ வழக்கில் முதல் ஆதாரமே. இவரை வைத்துதான் சுரேஷ் கைது, கேங் லீடர் முருகனுக்கு வலை என்று அதிரடிகள் ஆரம்பமாகின. லலிதா ஜூவல்லரி கொள்ளையில் மிகப்பெரிய நெட் ஒர்க் இருக்கும் என்று ஆரம்பத்தில் இருந்தே போலீசார் சந்தேகித்தனர்.  அதன்படியே கொள்ளையை நடத்தியது நாடு முழுக்க கைவரிசையை காட்டிய முருகன் என்பவன்தான் என போலீசார் கண்டறிந்துள்ளனர். 

கொள்ளையன் முருகன் தொடக்கத்தில்  சின்ன சின்ன திருட்டு என ஆரம்பித்து, பிறகுதான் பெரும் கொள்ளையனாக மாறியுள்ளான்.  பெங்களூருவில்  குழு அமைத்து திருட்டைத் தொயங்கியுள்ளான்.  நான்கு மாநிலங்களில்  முருகன் மீது 180 வழக்குகள் உள்ளன.  2011-ல் ஜாமீனில் பெங்களூரில் இருந்து வெளியான முருகன் ஹைதராபாத் போய் தன் திருட்டை தொடர்ந்திருக்கிறான். நகைக் கடை மட்டுமல்ல, வீடுகள், வங்கிகள் என எல்லா இடங்களிலும், எல்லா மாநிலங்களிலும் முருகனின் கைங்கர்யம் இருந்துள்ளது.  மக்களின் கவனத்தை திசை திருப்பி நகை, பணம் பறிப்பவதில் முருகன் ஸ்பெஷலிஸ்ட். 200 கைது வாரண்ட்கள் வரை நிலுவையில் உள்ளது. நெல்லையில் தினகரன் என்ற ஒரு கூட்டாளியுடன் சேர்ந்து முருகன் 800 கொள்ளைகளை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 

இத்தனை வழக்குகள் இருந்தும் முருகன் போலீசில் சிக்காமல் தனி ராஜ்ஜியம் நடத்தியதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்..? முருகன் தப்பிப்பது எப்படி? திருவாரூர் மாவட்டம், சீராத்தோப்பு, பேபிடாக்கீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவன் முருகன்.  திருட்டு முருகனை பிடிக்க 4 மாநில போலீஸாரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், முயற்சி பலிக்கவே இல்லை.  முருகனின் குடும்பம் இருக்கும் இடமே காவல்துறைக்கு தெரியவில்லை. ஏன் அவனது கூட்டாளிகளுக்கே தெரியாதாம். அவ்வளவு ரகசியம் காத்து வருகிறான் முருகன். அவனை போலீஸ் நெருங்க முடியாததற்கு காரணம் இது தான். 

 முருகன் செல்போன்களை பயன்படுத்தாமல் கூட்டாளிகளுடன் வாக்கி டாக்கி மூலமே கொள்ளைக்கான ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்து வந்துள்ளான்.  கொள்ளையடித்தவற்றை பணமாக மாற்ற புரோக்கர்கள் உதவி செய்துள்ளனர்.  இதனால் காவல்துறையினர் இந்தக் கும்பலை மோப்பம் பிடிப்பதில் கோட்டை விட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அண்ணாநகரில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில்  திருவாரூர் முருகனின் நெல்லை நண்பனான  தினகரன் கூட்டாளிகள் பிடிபட்டனர். அதற்கு திட்டம் போட்டுக் கொடுத்தது திருவாரூர் முருகன்.  ஆனால் அவனை போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை.

திருவாரூர் முருகனின் பின்னணியில் யாரோ இருந்து அவனைக் காப்பாற்றுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் திருவாரூர் திருட்டு முருகனின் கொள்ளைக் கூட்டாளியான மணிகண்டன் சசிகலாவின் தம்பி திவாகரனுடன் ஒரு விழாவில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.