வேலூரில் நீதிமன்றம் அருகே ரவுடி ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் செல்வராஜ் (வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. செல்வராஜ் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில்  இருந்து வருகின்றன. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு ரவுடியாக வலம் வந்த செல்வராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்தனர். 

நேற்று இரவு 7.30 மணியளவில் செல்வராஜ் தனது வீட்டின் அருகே உள்ள சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வராஜை வெட்ட முயன்றுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் மர்மநபர், செல்வராஜை விடாமல் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதியில் வெட்டியுள்ளார். 

ரத்தவெள்ளத்தில் உயிரை காப்பாற்ற ஓடிய செல்வராஜ் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து மறுபுறம் உள்ள ஆவின் பால்பண்ணை வளாக நுழைவு வாயில் கேட்டை திறந்து தடுமாறி கீழே விழுந்தார். அவரின் பின்னால் மர்மநபரும், அரிவாளுடன் அங்கு ஓடிவந்தார். இதைக்கண்ட பால்பண்ணை காவலாளி உடனடியாக விசில் ஊதினார். இதையடுத்து மர்மநபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். 

இதையடுத்து காவலாளி சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் செல்வராஜை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், செல்வராஜ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை வெட்டிக்கொலை செய்த மர்மநபர் யார்? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.