Asianet News TamilAsianet News Tamil

தலித் சிறுவர்களிடம் தீண்டாமை: கடைகாரர் உள்ளிட்ட இருவர் கைது.. கடைக்கு சீல்

தென்காசி சங்கரன்கோவில் அருகே சிறுவர்களிடம் தீண்டாமை  தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Untouchability of children near Tenkasi Sankarankoil: One arrested..
Author
First Published Sep 17, 2022, 11:30 AM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சிறுவர்களிடம் தீண்டாமையில் ஈடுபட்டது தொடர்பாக பெட்டிக் கடை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அப்பெட்டிக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

எத்தனையோ அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில், கல்வி வளர்ச்சியில் இந்தியா வீறுநடை போட்டாலும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மதவாதம் போன்ற பிற்போக்குத் தனங்களால் நாடு இன்னும் தேங்கி நிற்கும் அவலம் தொடர்கிறது. இன்னும் கூட கிராமங்களில் சாதிக் கொடுமை தலைவிரித்தாடும் நிலை உள்ளது.  கீழ்சாதி, மேல்சாதி, ஊர் ,சேரி என்ன பாகுபாடுகள் மேலோங்கி உள்ளது. தமிழகம் சமூக நீதி மண், பெரியார் மண் என்று சொன்னாலும் இன்னும் சாதி வெறுப்பு மண்டிக் கிடக்கிறது, இன்னும் ஆயிரம் பெரியார் வந்தாலும் திருந்தாது என்ற நிலைதான் உள்ளது. 

பெரியார் திடலுக்கு வந்தேன் என்றால் என் தாய் வீட்டுக்கு வந்துள்ளேன் என அர்த்தம்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.!

தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலமாக  இருந்தாலும், பள்ளிக் குழந்தைகளிடம்கூட  தீண்டாமை வெளிக்காட்டும் சாதி கொடுமை உள்ளது. தற்போது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சான்குளம் கிராமத்தில் இதுபோன்ற ஒரு கொடுமை அரங்கேறியுள்ளது. பாஞ்சாகுளத்தில் ஆதிதிராவிடர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது,  இப்பள்ளியில் அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்று தின்பண்டம் வாங்க முற்படுகின்றனர்.

அப்போது அந்த கடைகாரர், உங்களுக்கு எல்லாம் தின்பண்டம் கொடுக்க முடியாது,  ஊர்க்கூட்டம் போட்டு  முடிவு செய்யப்பட்டுள்ளது, அதனால் உங்களுக்கு கடையில் இருந்து எதுவும் தரக்கூடாது என கட்டுப்பாடு உள்ளது எனக் கூறுகிறார், அதற்கு ஏதும் அறியாத அந்த அப்பாவிச் சிறுவர்கள் கட்டுப்பாடு என்றால் என்ன என்று கேட்கின்றனர்.

இதையும் படியுங்கள்: எளியவர்கள் மீது சுமத்தப்பட்ட இழிவைப் போக்க இறுதிவரை போராடியவர் பெரியார் - கமல்ஹாசன் புகழாரம்

அதற்கு அந்த கடைக்காரர் உங்கள் யாருக்கும் தின்பண்டம் கொடுக்கக் கூடாது என்று எங்கள் ஊர் சார்பில் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளார்கள், அதனால் உங்க தெருகாரர்கள் இங்கு வரக்கூடாது,  அதனால் நீங்கள் யாரும் இங்கு பொருள் வாங்க முடியாது என்றும், உங்கள் தாய் தந்தையரிடம் போய் சொல்லுங்கள் என்றும் மாணவர்களை அனுப்பி வைக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

சின்னஞ்சிறு பிஞ்சுகளின் மனதில் சாதி உணர்வைத் தூண்டும் இந்த கெடுஞ் செயல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாதி கட்டுப்பாடு போட்ட  ஊர் நாட்டாமை மற்றும் அந்த கடைகாரர் என அனைவரையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் பள்ளி சிறுவர்கள் தீண்டாமை விவகாரத்தில் போலீசார் 20 வயதுடைய ராமச்சந்திரன் என்ற நபரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் ஊர் நாட்டாமை தலைமறைவாகியுள்ளார். கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து  பேசியுள்ள அந்த சிறுவர்கள், பள்ளிக்கூடத்தில் கூட மற்ற ( சாதி) மாணவர்களை பெஞ்சில் அமர வைக்கிறார்கள், எங்களை தரையில் அமர வைக்கிறார்கள் எங்களே தரையில் அமர சொல்கிறார்கள். வழக்கம்போல நாங்கள் இந்த கடையில்தான் தின்பண்டம்  வாங்கி சாப்பிடுவோம், ஆனால் இப்போது ஊர் கட்டுப்பாடு என்கிறார்கள், எங்கள் தெருவில் உள்ளவர்களுக்கு தின்பண்டம் தரமுடியாது என கூறுகின்றனர்,  நாங்கள் தெருவுக்குள் நடக்கக்கூடாது என்றும் கூறுகின்றனர் என குழந்தைகள் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த ஊர் கட்டுமானம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பெட்டி கடை உரிமையாளர் மகேஸ்வரன் மற்றும் ராமச்சந்திரனை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்  மகேஸ்வரனுக்கு சொந்தமான பெட்டிக்கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதில் இன்னும் சிலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மாணவர்களுக்கு கடையில் திண்பண்டங்கள் மறுப்பு ஏன்.?

பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது அந்த வழக்கிற்க்கான விசாரணை வந்துள்ள நிலையில், இதுகுறித்து ஊர் சமுதாய மக்கள் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அதன் முடிவில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடைகளில் எதுவும்  கொடுக்கக் கூடாது என தீர்மானம் பட்டதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில்தான் இந்த வீடியோ வெளியிடப்பட்ட இருக்கலாம் எனவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் தாசில்தார் பாபு  முன்னிலையில் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios