காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே வி. ஆர். பி சத்திரம் பகுதியை சேர்ந்த வீரா என்கிற வீரபத்திரன் (வயது 35). இவர் அண்மையில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பெரும்புதூர் பேருராட்சியின் 11வது கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

பின்னர் அமைச்சர் தா. மோ. அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இரவு 10 மணியளவில் திருப்பெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் அருகே வீரபத்திரன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் வீரபத்திரனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். தகவலறிந்து வந்த திருப்பெரும்புதூர் போலீசார் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த வீரபத்திரனை மீட்டு திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக தண்டலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பெரும்புதூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று வீரபத்திரன் மனைவி மற்றும் உறவினர்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு வீரபத்திரன் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி மற்றும் வெங்காடு கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் தேர்தல் முன் விரோதம் காரணமாக கூலிப்படையை வைத்து வீரபத்திரனை வெட்டியதாக ஒப்புக்கொண்டனர். மேற்கண்ட இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலிசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள நபர்களை போலிசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் கூலிப்படையை சேர்ந்த விழுப்புரம் மாவட்டம் பொம்பூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (எ) பாலா (வயது 29) மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த பாரத் (வயது 35) ஆகியோரை கைது செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேற்கண்ட கூலிப்படையை சேர்ந்த இருவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க : யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைக்குறது.. 1,500 கோடி கமிஷன் போகுது.! பகீர் கிளப்பும் எடப்பாடி பழனிசாமி

இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !