திருச்சி லலிதா ஜூவல்லரியில் 36 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனது தொடர்பாக 2 குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில், விலங்குகளின் முகங்கள் போல வடிவம் கொண்ட முகமூடிகள் மற்றும் கை உறை மற்றும் ஜெர்கின் அணிந்து கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ளது லலிதா ஜுவல்லரியில் நகைகள், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளை நடந்ததை கண்ட ஊழியர்கள், உடனடியாக போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. நகைக்கடையின் பின்புற சுவரை ஓட்டை போட்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து நகைகளை கொள்ளையடித்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தரை தளத்தில் மட்டும் 36 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொள்ளை தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில் கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். 

விலங்குகளின் முகங்கள் போல வடிவம் கொண்ட முகமூடிகளை அணிந்துகொண்டும், உடல் முழுவதையும் மறைக்கும் ஆடைகளை அணிந்துகொண்டும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் அதிகாலை 2.11 முதல் 3.15க்குள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குழந்தைகள் விளையாடும் முகமூடிகளை கொள்ளையர்கள் அணிந்திருந்ததாகவும் கைரேகைகள் ஏதும் சிக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

அதேசமயம், நகைக் கடையில் 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் பணியில் இருக்கும் நிலையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பல நாட்களாக திட்டமிட்டு இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் இடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும். சிசிடிவி காட்சிகளை கொண்டு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.