திருத்தணியில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி இளைஞர் ஓட்டலுக்குள் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரண் அடைந்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே நேற்று முன்தினம் மதியம் 2.30 மணியளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபரை காரில் வந்த 4 பேர் வழிமறித்து பட்டப்பகலில் பயங்கர ஆயுதங்களால் ஓட ஓட விரட்டினர். பின்னர், தப்பியோடி அங்குள்ள ஓட்டலுக்குள் புகுந்த வாலிபரை சரமாரியாக தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டிவிட்டு கும்பல் சென்றது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை கண்டதும் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

 

 இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வந்தனர்.

 

இந்நிலையில், மகேஷை வெட்டிக் கொலை செய்த ஜப்பான் என்கிற விமல்ராஜ், அஜீத்குமார், ராஜ்குமார், கோபிராஜ் ஆகிய 4 பேர் திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் இன்று சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய்பேட்டையில் வாலிபால் போட்டி நடத்துவதில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

கொலை செய்யப்பட்ட மகேஷின் நண்பர் விக்கி என்பவரை கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி கொலை செய்தனர். இதன் தொடர்ச்சியாக அவரது நண்பர் மகேஷையும் கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.