பொள்ளாச்சியில் பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களை முகநூல் மூலம் நட்பாகப் பேசிப் பழகி அவர்களை இந்த காமத் கொடூர கும்பல் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த செய்தி தமிழகத்தையே அதிரவைத்துள்ளது.  

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட  திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை கைது செய்யப்பட்டு, இவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில்  அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பிருப்பகாக சொல்லப்பட்டது.

இந்நிலையில்,  இந்த விவகாரத்தின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றிய தமிழக அரசு, பின்னர் CBIக்கு மாற்ற பரிந்துரை செய்தது. இதனையடுத்து இவ்வழக்கு இன்று CBIக்கு மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர்  திருமா , “பொள்ளாச்சி கொடூரம் தொடர்பாக யாரும் வற்புறுத்தாமலேயே தற்போது தமிழக அரசு CBI விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது. இதில் ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்கு தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கூறியிருக்கிறார். 

இந்தப் பின்னணியில் CBI விசாரணைக்கு மாற்ற வேண்டியதன் நோக்கம் என்ன என்ற சந்தேகம் எழுகிறது. மக்கள் CBI விசாரணை கேட்டு போராடும் போதெல்லாம் அதற்கு உடன்படாதவர்கள், பரிந்துரை செய்யாதவர்கள் யாரும் கேட்காமல் CBIக்கு மாற்றுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது, யாரையோ காப்பாற்றவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறார்கள். மத்தியில் தங்களது தோழமைக் கட்சி ஆட்சியில் இருப்பதால், அதனை தவறாக பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. எனவேதான் நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.