இளவரசனின் உடலில் எந்த நச்சும் இல்லை என்றும், சிறிதளவு எத்தில் ஆல்கஹாலை அவர் உட்கொண்டிருந்தது தெரிய வந்தது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இளவரசனின் கையெழுத்து அந்தக் கடிதத்தில் இருப்பதை சென்னை தடயவியல் துறை ஆய்வகம் உறுதி செய்துள்ளது. சென்னையிலிருந்து திரும்பிய இளவரசன் மனமுடைந்து இருந்தார் என்பதை அவரது நண்பர்களின் வாக்குமூலங்கள் உறுதி செய்துள்ளது என்றும், இளவரசனின் கைக்கடிகாரம் 1.20க்கு நின்றுபோனபோது குர்லா எக்ஸ்பிரஸ் அந்த பகுதியைக் கடந்து சென்றது உறுதி செய்யப்பட்டது என்றும் சிங்காரவேலு ஆணையம் தெரிவித்துள்ளது.

தர்மபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரிப்பதற்கு 2013ஆம் ஆண்டு தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலு விசாரணை ஆணைய அறிக்கையை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என  விசிக கூறியுள்ளது.

இதுகுறித்து விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தர்மபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞன் இளவரசன் அதே ஊரைச் சேர்ந்த திவ்யா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அதையொட்டி மிகப்பெரிய கலவரம் ஒரு அரசியல் கட்சியால் தூண்டி விடப்பட்டு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த சம்பவத்திற்குப் பிறகு இளவரசன் மர்மமான முறையில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் இறந்து கிடந்தார். அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் எனக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், அவரது உடலை நேரில் பார்த்தவர்கள் அது தற்கொலையாக இருப்பதற்கு வாய்ப்பில்லை, அவர் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தை எழுப்பினர். அவரது தந்தையும் இளவரசன் மரணம் குறித்து விசாரணை வேண்டும் என வலியுறுத்தினார் அதனடிப்படையில். அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் நீதிபதி சிங்காரவேலு ஆணையம் அமைக்கப்பட்டது. அது 5 ஆண்டுகள் விசாரணை செய்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு. ஒன்பது மாதங்கள் கடந்த பிறகும் தமிழக அரசு அதை வெளியிடவில்லை. அந்த அறிக்கையின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க வில்லை.

இந்நிலையில் ஆங்கில ஏடான ஃபிரண்ட்லைன் அந்த அறிக்கையின் இறுதிப் பகுதியை வெளியிட்டிருக்கிறது. அதைப் பார்த்து பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களுக்காகக் குரல் எழுப்பிய ஜனநாயக சக்திகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிங்காரவேலு ஆணையத்தின் முழுமையான அறிக்கையைப் பொதுமக்களுக்கு வெளியிடாமல் தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பதற்குக் காரணம் என்ன ? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே மக்களின் பயத்தைப் போக்கவும் குழப்பத்தை தீர்க்கவும் சிங்காரவேலு ஆணையத்தின் முழுமையான அறிக்கையைக் காலந்தாழ்த்தாமல் தமிழக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். அந்த அறிக்கையின் பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, விசிக வன்னி அரசு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கண்டன பதிவில், இளவரசன் படுகொலை தொடர்பான விசாரணை ஆணையமும்.ஆணையங்கள் எல்லாம் அதிகார வர்க்கம் பக்கம் நின்று தான் பேசும். உண்மை ஒரு போதும் தோற்றுவிடாது.  இளவரசன் படுகொலையை நீதிபதி சிங்காரவேலன்களால் மறைக்க முயற்சிக்கலாம். ஆனால், திவ்யாவுக்கு உண்மை தெரியும். திவ்யா ஒரு நாள் பேசுவார்.அப்போது ராமதாசு, சிங்காரவேலன்கள் அம்பலப்பட்டு நிற்பார்கள் எனக் கூறியுள்ளார்.