பெங்களூரில் காதல் திருமணம் செய்த அமூல்யா என்ற பெண், திருமணமான மூன்று மாதங்களில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தற்கொலை அல்ல, வரதட்சணை கொடுமையால் நடந்த கொலை என அவரது தாய் புகார்.

பெங்களூர் அடுத்துள்ள பேடரஹள்ளி அருகருகே வசித்து வந்த அமூல்யாவும், அபிஷேக் இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டார் பெற்றோருக்கும் தெரியவந்தது. இதனைய இரு வீட்டார் சம்மதத்துடன் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில் திருமணமான மூன்றாவது மாதத்தில் அமூல்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கணவர் அபிஷேக், மனைவியை இரவு உணவிற்காக வெளியே அழைத்துச் செல்வதாக கூறியிருந்த நிலையில், அழைத்து செல்லாததால் அமூல்யா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் முதலில் கூறப்பட்டது.

ஆனால், இறந்த அமூல்யாவின் தாய் சுனிதா, இது தற்கொலை அல்ல, கொலை என்று குற்றம் சாட்டியிருப்பது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. "என் மகளை அவளது கணவரே கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளார். கணவர் அபிஷேக்கிற்கு என் மகள் மீது சந்தேகம் இருந்தது, யாருடனும் பேச அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி, அவரது குடும்பத்தினர் என் மகளுக்கு வரதட்சணை கொடுமை செய்தனர். 'சமைக்கத் தெரியவில்லை, காதலித்து திருமணம் செய்துகொண்டாள்' என்று திட்டிக்கொண்டே இருந்தனர். அவர்களது குடும்பத்தினரின் கொடுமையால்தான் என் மகள் இறந்தாள்" என்று சுனிதா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

வழக்குப்பதிவு

தற்போது அமூல்யாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பேடரஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அவரது கணவர் அபிஷேக்கை போலீசார் காவலில் எடுத்துள்ளனர். அமூல்யாவின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற உண்மை போலீசாரின் விசாரணைக்கு பிறகே தெரியவரும்.