உடுப்பி பெண்கள் கழிவறை வீடியோ:ரகசிய கேமராக்கள் எதுவும் இல்லை - குஷ்பு தகவல்!
உடுப்பி பெண்கள் வீடியோ சம்பவத்தில் கழிவறைகளில் ரகசிய கேமராக்கள் இல்லை என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் இன்னும் தனியாத நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பி பாராமெடிக்கல் கல்லூரி பெண்கள் கழிவறையில் மாணவிகளை வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி அம்பலபாடியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 3 பேர், கழிவறையில் ரகசியமாக செல்போன் மூலம் சக மாணவிகளை ஆபசமாக வீடியோ எடுத்து தங்கள் ஆண் நண்பர்களுக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த மாணவிகள் 3 பேர் சஸ்பெண்டு செய்து கல்லூரியில் நிர்வாகம் உத்தரவிட்டது. இதுகுறித்து தாமாக முன் வந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 மாணவிகள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவின் செமிகண்டக்டர் துறை பின் தங்க முந்தைய அரசுகளே காரணம்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!
இரண்டு சமூகத்தை சேர்ந்த மாணவிகள் சம்பந்தப்பட்டுள்ள இந்த வீடியோ விவகாரத்துக்கு இந்து அமைப்புகள், பாஜக, சமூக ஆர்வலர்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குற்றம் சாட்டப்பட்ட மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உடுப்பி கல்லூரிக்கு நேரில் சென்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு விசாரணை மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கழிவறைகளில் ரகசிய கேமராக்கள் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. அதில் உண்மை இல்லை. பொய்யான வீடியோக்கள் சுற்றி வருகின்றன. இது ஒரு கல்வி நிறுவனம். எனவே, ரகசிய கேமராக்கள் இருக்க முடியாது. நாங்கள் காவல்துறையிடம் பேசி வருகிறோம். காவல் துறையின் விசாரணையும் எங்கள் தரப்பில் இருந்து விசாரணையும் தொடரும், விரைவில் ஒரு முடிவுக்கு வருவோம். இந்த வழக்கு பற்றி, கூடுதல் விபரங்களை வெளியிட முடியாது. வதந்திகளை அடிப்படையாக வைத்து, அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. இவ்வழக்கில் பொறுமை அவசியம். தடயவியல் ஆய்வு முடிவுக்காக காத்திருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களின் சமூகத்தைப் பொருட்படுத்தாமல் பெண்களின் பாதுகாப்பதில் மகளிர் ஆணையம் கவனம் செலுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால், பாஜக நிர்வாகியான குஷ்புவின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன. சமூக ஆர்வலரும், பாஜக ஆதரவாளராக கருதப்படுபவருமான ராஷ்மி சமந்த், ரகசிய கேமிராக்கள் என்ற வார்த்தை விளையாட்டு மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், ரகசிய கேமிராவுக்கும், செல்போன்களை பெண்கல் கழிவறையில் மறைத்து வைத்து ரகசியமாக வீடியோ எடுப்பதற்கும் என்ன வேறுபாடு உள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, இதில் சம்பந்தப்பட்ட மாணவிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, கர்நாடக மாநில பாஜக மகளிர் அணி சார்பில் நேற்று பெங்களூரு, மைசூரு, உடுப்பி, தட்சிண கன்னடா உட்பட பல மாவட்டங்களில் போராட்டம் நடந்தது. இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறித்தியுள்ளனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா குற்றம் சாட்டியுள்ளார். “நண்பர்களுக்கு இடையே இதுபோன்று நடந்திருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதை ஊதி பெரிதாக்கி அரசியல் சாயம் பூச வேண்டுமா.” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, இந்த வீடியோ வேடிக்கைக்காக செய்யப்பட்ட ப்ராங் வீடியோ என உள்ளூர் காவல்துறை மற்றும் செவிலியர் கல்லூரி அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், ஒருவரின் தனியுரிமை மற்றும் வேடிக்கை ஆகியவற்றை எப்படி வித்தியாசப்படுத்துவது என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.