மதுரையில் பூட்டி கிடந்த வீட்டில் வெடித்த மர்ம பொருள்.! வெடித்தது நாட்டு வெடிகுண்டா? போலீசார் தீவிர விசாரணை
மதுரையில் பூட்டி கிடந்த வீட்டில் பலத்த சத்தத்தோடு மர்ம பொருள் வெடித்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் சிதறியது. இதன் காரணமாக அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சம் அடைந்தனர். வெடி விபத்து தொடர்பாக போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூட்டிய வீட்டுற்குள் வெடி விபத்து
மதுரை மாநகர் கரிமேடு விஸ்வசாபுரி 1 வது தெரு பகுதியை சேர்ந்த அஜித், இவர் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்துவருகிறார். இவர் மருந்து விற்பனையாளராக ( மெடிக்கல் ரெப்) பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அஜித்தின் வீட்டிற்குள் இருந்து பலத்த சத்தத்தோடு திடிரென வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அருகிலுள்ள வீட்டில் உள்ளவர்கள் அச்சமடைந்து வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். அப்போது அஜித்தின் வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது திடீரென மர்ம பொருள் வெடித்து அங்கு வைத்திருந்த பொருட்கள் வெடித்து சிதறிய நிலையில் கிடந்துள்ளது .
வெடித்தது என்ன.?
இதனையடுத்து அருகில் உள்ளவர்களிடம் நடத்திய விசாரணையில் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் 2 நாட்களாக வீட்டில் இல்லை என்பதும் வெளியூர் சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் தொடர்பு கொள்ள செல்போன் எண்ணிற்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்துள்ளது. இந்தநிலையில் வீட்டிற்குள் வெடித்தது நாட்டு வெடிகுண்டா? வேறு ஏதேனும் வெடிக்கும் பொருளா என்ற கோணத்தில் கரிமேடு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். வெடி விபத்து தொடர்பாக போலீசார் சம்பவ இடத்தில் சோதனையும் விசாரணையையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படியுங்கள்