கொல்லிமலையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் மாணவியிடம் எஸ்.எஸ்.ஐ பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. மாணவியின் புகாரின் பேரில் காவல்துறையினர் எஸ்.எஸ்.ஐ மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 19 வயது மாணவி ஒருவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றார். இவரது தந்தை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கு உதவிக்காரமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி வாழவந்திநாடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மோகன் என்பவர் காரில் தந்தையும், மாணவியையும் கொல்லிமலையில் இருந்து திண்டுக்கல்லுக்கு அழைத்து சென்றுள்ளார்.

பாலியல் தொந்தரவு

அப்போது முள்ளுக்குறிச்சியில் மாணவியின் தந்தை பணி காரணமாக காரில் இருந்து இறங்கியுள்ளார். இதனையடுத்து எஸ்.எஸ்.ஐ மற்றும் மாணவியும் தனியாக காரில் சென்றுள்ளனர். அப்போது மாணவியிடம் எஸ்.எஸ்.ஐ பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத மாணவி அதிர்ச்சி அடைந்து அலறி கூச்சலிட்டுள்ளார். பின்னர் நாமக்கல்லில் காரில் இருந்து இறங்கிய அந்த மாணவி பேருந்து மூலம் திண்டுக்கல்லுக்கு சென்றுள்ளார்.

எஸ்.எஸ்.ஐ மோகன் கைது

இந்நிலையில் மாணவி நேற்று இரவு நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் வேதபிறவி வழக்குப் பதிவு செய்து எஸ்.எஸ்.ஐ மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

திருமணமாகி இரு மகன்கள்

கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ மோகன் நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டியை சேர்ந்தவர் என்பதும் திருமணமாகி இரு மகன்கள் உள்ளதாகவும், குடும்பத்துடன் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.