பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளார் நிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி.

பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை ஆபாச வீடியோ பதிவு செய்து, அவர்களை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன் என்ற ரிஸ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டு, தற்போது கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் சினிமா பிரபலங்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது ஸ்ரீ ரெட்டி களமிறங்கியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னை பாலியல் ரீதியாக அனுபவித்துவிட்டு, ஏமாற்றிய பிரபலங்களை எதிர்த்து அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய அவர் பிரமபலமாகி, தற்போது சில தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

பாலியல் ரீதியாக சீரழித்தவர்களில் முகத்திரையை கிழித்து  சமூகவலைதளங்களில் தொங்கவிடும் பதிவுகள் வெளியிட்டு வரும் அவர், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் விரைவில் சென்னை வந்து போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளேன். பாதிக்கப்பட்ட பொள்ளாச்சி பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன். இந்த விஷயம் கடந்த 7 வருடங்களாக நடந்து வருகிறது என சொல்லப்படுகிறது. பெண்கள் இப்படி குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக புகார் அளித்தால்தான் நியாயம் கிடைக்கும். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நான் போராடப் போகிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும், இத்தகைய குற்றங்களுக்கு எதிரான கடுமையான தண்டனைகள் சட்டமாக்கப்பட வேண்டும். நீதித்துறையை சீர் செய்ய வேண்டும்.  இத்தகைய குற்றங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்களை  கேள்விப்பட்டு இரண்டு நாட்களாக பெரும் கவலையடைந்துள்ளேன். பலாத்கார குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடக் கூடாது. அவர்களுக்கு சரியான தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என  கோபமாகவும் ஆவேசமாகவும் பேசி வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. 

ஏற்கனவே தனக்காக நிர்வாணப் போராட்டம் நடத்தி சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீ ரெட்டி மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் போராட்டம் நடத்துவாரா என தற்போதே சினிமா வட்டாரத்தில் பரபரப்பு நிலவியுள்ளது.