சூனியம் எடுப்பதாக சொல்லி, காட்டு பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக மந்திரவாதி ரூபேஷ்ஷை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

திருவனந்தபுரத்தை அடுத்துள்ள ஒரு மலைவாழ் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால், அடிக்கடி தலைவலி வந்து கொண்டே இருக்கவும், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் அந்த சிறுமியின் தந்தை. ஆனால் தலைவலி சரியாகவே இல்லை. கூலி தொழிலாளி என்பதால், மகளை பெரிய மருத்துவமனைக்கு அழைத்து சென்று கவனிக்கவும் முடியவில்லை.

இதனிடையே, மகளின் தலைவலிக்கு வேறு ஏதாவது காரணமாக இருக்குமோ? என பயந்த தந்தை அந்த ஊரில் உள்ள ரூபேஷ் என்பவரை சந்தித்து கேட்டுள்ளார். அப்போது ரூபேஷ் ஒரு மந்திரவாதி, பில்லி, சூனியம் எடுப்பவர் என்று ஊருக்குள் சொல்லி வருவதாலேயே, இவரை சந்தித்து பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. 35 வயதான ரூபேஷ், மகளின் நோய் குறித்து காரணம் கேட்ட தந்தையிடம், சிறுமிக்கு சூனியம் இருப்பதாகவும், அதை முதல்ல எடுத்துவிட்டால் சரியாகிவிடும் என கூறியுள்ளார்.

உடனே தந்தை மகளை அழைத்துக் கொண்டு ரூபேசை சந்திக்க சென்றார்,அப்போது ரூபேஷ், சிறுமியை பார்த்தவுடன், தனி இடத்தில் காட்டுப்பகுதியில் வைத்துதான் பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லி, காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு யாருமில்லாத இடத்தில் சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த சிறுமி அலறி கத்தி உள்ளார். இந்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் காட்டுப்பகுதிக்கு ஓடிச் சென்று, ரூபேஷை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ரூபேஷ் ஒப்புக் கொண்டதை அடுத்து போக்சோவில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.