மனைவி மற்றும் மாமியாரை தாக்கிய மருமகனை, மாமானார் துரத்தி சென்று கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இடையர்பாளையம் அடுத்த சோப்பு கம்பெனி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார், கவுண்டம்பாளையம் சக்தி நகரைச் சேரந்த தங்கமணி குமார் என்பவரது மகள் ஷாலினியை கடந்த ஒரு வருடத்திற்கு முன் காதலித்து கல்யாணம் செய்துகொண்டார்.

ராஜேந்திரன் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக சொல்லப்படும் நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மனைவி ஷாலினியை பிரசவத்திற்காக அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் ஷாலினி அனுமதிக்கப்பட்ட போது, பிரசவ வலி வராததாக சொல்லி டாக்டர்கள் திருப்பி அனுப்பியதாக சொல்லபப்டுகிறது . இதையடுத்து மருத்துவமனையிலிருந்து திரும்பிய ஷாலினி, கவுண்டம்பாளையம் செட்டியார் அம்மா காடு என்ற பகுதியிலுள்ள தனது அக்கா வீட்டிற்கு அம்மாவோடு சென்றுள்ளார். இதனிடையே நேற்று  இரவு ஷாலினியை பார்க்க அங்கு சென்ற கணவர் ரஜேந்திரன், தன்னுடன் வருமாறு மனைவி ஷாலினியை அழைத்துள்ளார்.

அப்போது, ஷாலினியின் தாய் மீனா, சரியாக வேலைக்கு செல்லாத உன்னோடு என் மகளை  அனுப்ப மாட்டேன் என கூறி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தனது மனைவி மற்றும் மாமியாரின் கன்னத்தில் பளார் பளார் என அறைந்து விட்டு அப்பகுதியை விட்டு செல்லவே, உடனடியாக இது குறித்து ஷாலினியின் தாய் மீனா தனது கணவரான தங்கமணிக்கு போனில் அழுதுகொண்டே சொல்லியுள்ளார்.

அதன்பேரில் அங்கு வந்த தங்கமணி, மருமகனான ராஜேந்திரனிடம் விசாரித்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. தொடர்ந்து அங்கிருந்து சென்ற ராஜேந்திரனை, துரத்தி சென்ற தங்கமணி, தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வயிற்றில் குத்தியுள்ளார். அந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே விழுந்துள்ளார். மாமியார் மீனா தங்கமணியை தடுக்க முயன்றதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த துடியலூர் காவல் நிலைய போலீசார், வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மருமகனை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மாமனார் தங்கமணியை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். மாமியார் மீனாவும் தலைமறைவாகியுள்ளார்.