திரிபுராவை சேர்ந்த 17 வயது சிறுமி சாந்தினிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சமூகவலைதளம் வாயிலாக அஜோய் ருத்ராபாலின் அறிமுகம் கிடைத்தது. நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. 

இந்நிலையில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு பிறகு சாந்தினியின் வீட்டுக்கு வந்த அஜோய் அவரிடம் காதலை தெரிவித்து திருமணத்துக்கு சம்மதம் கேட்டுள்ளார். காதலன் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டவுடன் சந்தோஷத்தில் எதனையும் யோசிக்காமல் அவருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

சாந்திர்பசாரில் உள்ள அஜோய் வீட்டுக்கு சென்ற பிறகுதான் அவனின் உண்மை முகம் சாந்தினிக்கு தெரியவந்தது. சாந்தினியை வீட்டில் அடைத்து வைத்து அவளை விட வேண்டுமானால் ரூ.50 ஆயிரம் தரும்படி அவளது குடும்பத்தினரிடம் அஜோல் கேட்டுள்ளான். 

இதற்கிடையே அஜோய் மற்றும் அவரது நண்பர்களும் சாந்தினியை பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சுமார் 2 மாதங்களாக இந்த கொடூரம் நடந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று சாந்தினியின் குடும்பத்தினர் அஜோய் கூறிய இடத்துக்கு வந்து தங்களால் எவ்வளவுதான் முடிந்தது என்று ரூ.17 ஆயிரத்தை அஜோயிடம் கொடுத்துள்ளனர். 

ஆனால் முழுபணத்தையும் கொடுத்தால் மட்டுமே சாந்தினியை விடுவேன் என அவர்களை திருப்பி அனுப்பி விட்டான் அஜோய். கேட்ட பணம் கிடைக்காத ஆத்திரத்தில் அஜோய் மற்றும் அவரது தாயும் சாந்தினி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். 

இதனை பார்த்த அஜோய் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் சாந்தினியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.90 சதவீதம் உடல் எரிந்த நிலையில் சாந்தினி அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

ஆனால் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி சாந்தினி இறந்து விட்டார். இந்த தகவல் பரவியதையடுத்து அஜோய் வீட்டு முன் பெரும் கும்பல் கூடியது. பின் அந்த கும்பல் அஜோய் மற்றும் அவரது தாயாரை அடித்து துவைத்தது. 

சாந்தினி மீது தீ வைத்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து முக்கிய குற்றவாளியான அஜோய்யை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்த வருகின்றனர்