நேற்று மாலை காணாமல் போன ஆறு வயது சிறுமி இன்று கை, கால் கட்டப்பட்ட நிலையில் வீட்டின் மறைவான சந்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்த தம்பதி சதீஷ், வனிதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை ரிதன்யாஸ்ரீ . இவர் திப்பனூர் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி அலைந்தனர். இரவு முழுவதும் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து தடாகம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை சிறுமியின் வீட்டிற்கு அருகேயுள்ள மறைவான சிறிய சந்து பகுதியில் முகத்தில் டிசர்ட் சுற்றப்பட்டு, கை கால் கட்டப்பட்ட நிலையில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 

அந்த சிறுமியின் உடலில் கத்தியால் கீறிய காயங்கள் இருந்தன. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதுகுறித்து போலீசார் மற்றும் தடய அறிவியல் துறையினர் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்யும் வரை சிறுமியின் சடலத்தை வாங்கப்போவதில்லை என உறவினர்கள் போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.