உலகளவில் இந்தியாவில் தான் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக அண்மையில் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் பார்ப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியது. இதனால் மத்திய உள்துறை தமிழக காவல்துறையை உடனடியாக நடவடிக்கை எடுக்க எச்சரித்தது.

இதையடுத்து தமிழகத்தில் ஆபாச படத்தை பரப்புபவர்கள் தொடர்பான பட்டியலை காவல்துறை தயார் செய்தது. அதனடிப்படையில் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்கிற மெக்கானிக் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். சமூக ஊடகங்கள் மூலமாக 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆபாச படங்களை அவர் பரப்பியதாகும் அது தொடர்பான விபரங்களை கிறிஸ்டோபரின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்த பட்டியலில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் அதிகம் இடம்பெற்றிருப்பது காவல்துறை வட்டாரத்தையே அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. அவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலமாக நேரில் அழைத்து விசாரணை செய்யப்படவுள்ளனர். மேலும் அவர்கள் கைது செய்யவும் வாய்ப்பிருப்பதாக காவலர்கள் கூறுகின்றனர். ஆபாச படங்களை பார்த்தவர்கள் மீது நடவடிக்கை இருக்காது என்றும் அதை அதிகம் பரப்பிவர்கள் தான் கைதாவார்கள் என அண்மையில் காவல்துறை அதிகாரி ரவி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.