சென்னை அரும்பாக்கத்தில் இன்று பட்டப்பகலில் முன்விரோதம் காரணமாக ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி. பிரபல ரவுடியான இவர் திருவொற்றியூரில் வசித்து வருகிறார். இவர் மீது கொலை, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்நிலையில், ரவுடியாக வாழ்ந்த கிருஷ்ணமூர்த்தி திருந்தி வாழ்ந்து வந்தார். தற்போது அவர், தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். 

இந்நிலையில் தண்ணீர் கேனை சப்ளை செய்வதற்காக அரும்பாக்கத்தில் உள்ள கோயில் அருகே மினி லாரியில் வந்தார். அப்போது கிருஷ்ணமூர்த்தி 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. அவர்களின் கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதனை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

ஆனால் மர்ம கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலை நடந்த இடத்தில் பதிவான கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் இருந்த இடத்தில் மிகவும் துணிச்சலுடன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.