வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த ரவுடி பினுவை சென்னை எழும்பூரில் வாகன சோதனையில் போது போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கடந்த 2018 பிப்ரவரி 7ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மலையம்பாக்கத்தில் ரவுடி பினு, தமது கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிந்து அந்த அப்பகுதியை கூற்றி வளைத்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை அதிரடியாக கைது செய்தனர். ஆனால் முக்கிய குற்றவாளியான பினு அங்கிருந்து தப்பித்தார். 

இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை தேடி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 13-ம் தேதி ரவுடி பினு போலீசாரிடம் சரணடைந்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். சுமார் 3 மாதம் வேலூர் சிறையில் இருந்து வந்த ரவுடி பினு, ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அவருக்கு கடந்தாண்டு செப்டம்பர் 23-ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து அவர் விடுக்கப்பட்டார். 30 நாட்கள் மாங்காடு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் ஜாமீனில் வந்த பினு அதன் பின்னர் மாங்காடு காவல் நிலையத்துக்கு கையெழுத்திடவில்லை என்றும் பினு தலைமறைவானதை போலீசார் உறுதி செய்தனர்.

 

இதுகுறித்து போலீசார் ரவுடி பினுவின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்நிலையில் தலைமறைவாக ரவுடி பினுவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனையடுத்து கும்மிடிப்பூண்டி அருகே ரவுடி பினுவை அக்டோபர் 14-ம் தேதி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். எனினும், மீண்டும் போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்ற ரவுடி பினு, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் மக்களவை தேர்தல் தொடர்பாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இப்போது ரவுடி பினு மற்றும் அவர்களது கூட்டாளியான அக்பர், மனோஜ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சென்னையில் 256 ரவுடிகளை கைது செய்ய போலீசார் குறி வைத்துள்ளனர்.