லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளைக் கும்பலின் தலைவன் திருவாரூர் முருகனைப் பற்றி துப்புத் துலக்கமுடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது காவல்துறை வட்டாரம்.  உடலில் பலம் இல்லாவிட்டாலும் சிந்திப்பதில் கெட்டிக்காரனான முருகனிடம் செல்போன் கிடையாது. பொது நிகழ்ச்சிகளில்கூட போட்டோ எடுத்துக்கொள்ள மாட்டான். ஒரு திருட்டுக்கு வந்த கூட்டாளிகளை அடுத்த திருட்டுக்கு வைத்துக்கொள்ள மாட்டான். இதெல்லாம் தான் அவன் பிடிபடாமல் இருக்க முக்கியக் காரணங்கள்.  

இத்தனைக்கும் முருகனுக்கு சொந்த ஊர் திருவாரூர் கிடையாது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமம். பிழைப்புக்காக திருவாரூர் வந்து நான்கு சகோதரிகளும் இரண்டு சகோதரர்களும் கொளுத்தும் வெயிலில், காலில் செருப்புக்கூட இல்லாமல் சாலை போடும் வேலைகளை செய்திருக்கிறார்கள்.  அவனது அக்காள் கனகவள்ளிதான் குடும்பத்தைக் காப்பாற்றி இருக்கிறார்.   முருகன், அந்த வேலையை வெறுத்துவிட்டு, பெங்களூர் சென்று விட்டான். அங்கு டிரைவர் வேலையில் திருநெல்வேலியை சேர்ந்த தினகரன் என்பவனோடு நட்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள வீடுகளில் கொள்ளையடிக்கத் துவங்கியவன், பிறகு வங்கிகள், நகைக்கடைகளை குறிவைத்து கொள்ளையடித்துள்ளான். அங்கு மஞ்சுளா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளான்.  இரண்டு குழந்தைகளோடு எலக்ட்ரானிக் சிட்டியில் சொந்த வீடு வாங்கி அங்கேயே தங்கி கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா என நான்கு மாநிலங்களிலும் கொள்ளையைத் தொடர்ந்துள்ளான். 

அந்தப் பணத்தில் ஜே.சி.பி. ரோடு ரோலர், கான்கிரிட் கலவை மெசின் என தனது சொந்தங்களுக்கு கொடுத்துள்ளான். தனது சொந்தக்காரர்களுக்கு தனது சொந்த பணத்தில் திருமணம் செய்து வைத்துள்ளான். அவர்களது சொந்தக்காரகளுக்கு காட்பாதர் போல செயல்பட்டு வந்துள்ளான். அவனது சொந்தக்காரர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ‘’முருகன் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியாது. அப்படியே இருப்பது தெரிய வந்தாலும் முருகனை காட்டிக் கொடுக்க மாட்டோம்... என வீராப்பாகவே சொல்லி விட்டதாகக் கூறுகிறார்கள்.