கிருஷ்ணகிரி அருகே தொழிலதிபரை வீடு புகுந்து 8 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி சாய்த்து அங்கிருந்து தப்பித்து சென்றது. ரத்த வெள்ளத்தில் சரிந்த இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலம், பொம்மனஹள்ளியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஏவிஸ் விலாசில் தன்னுடைய நண்பரான நஷிர் என்பவரை சந்திக்க வந்துள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்த 8 பேர் கொண்ட மர்மகும்பல் இஸ்மாயிலை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். 

இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இஸ்மாயில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் கர்நாடக மாநிலம், பொம்மனஹள்ளி அருகே உள்ள மங்கமனப்பாள்யா பகுதியை சேர்ந்த இஸ்மாயில் (38) என்பதும், பிரபல ரவுடியான இவர் மீது வழிப்பறி, கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. 

மேலும் ரியல் எஸ்டேட் அதிபரான இஸ்மாயில் கொலைக்கு காரணம் தொழிற் போட்டியா? அல்லது அரசியல் போட்டியா? முன்விரோதம் காரணமாக நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.