சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண்ணை வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சுரேந்தர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் கூட்டுறவுத்துறை ஊழியரான தேன்மொழி என்ற இளம்பெண்ணிடம் ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞர் கடந்த 14-ம் தேதி இரவு 8 மணி அளவில் வெகுநேரமாக பேசிக்கொண்டிருந்தார். திடீரென இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர். அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தேன்மொழியை சுரேந்தர் வெட்டினார்.

 

இதில், இளம்பெண் தேன்மொழி அலறியடித்து துடித்து கூச்சலிட்டார். அப்போது கடற்கரைக்கு செல்லும் மின்சாரயில் முன் பாய்ந்து சுரேந்தர் தற்கொலைக்கு முயன்றார். கத்திக்குத்தில் படுகாயமடைந்த தேன்மொழி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், ரயிலில் அடிபட்டு படுகாயமடைந்த சுரேந்தர் ராஜீவ்காந்தி அரசு  மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், ரயிலில் அடிபட்டு படுகாயமடைந்த சுரேந்தர் சிகிச்சை பலனின்றி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.