பிரபல ரவுடி மணிகண்டனின் கூட்டாளியை ஆரோவில் அருகே வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அடுத்த பொம்மையார்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் 24,  புதுச்சேரி அடுத்த, குயிலாப்பாளையத்தை சேர்ந்த ரவுடி மணிகண்டன் ஆதரவாளரான இவர், நேற்று மாலை, 3:00 மணியளவில், ஆரோவில் அருகே முந்திரிதோப்பில் கழுத்து, தலை, முதுகு உள்ளிட்ட 5 இடங்களில் வெட்டப்பட்டு வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொலை நடந்த இடத்தை மோப்பம் பிடித்த நாய், பிள்ளைச்சாவடி சாலை வரை சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது. ஆகையால் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்று இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தொழில்போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாக பல்வேறு கொலைகள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.