தெலுங்கானாவைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் கடந்த வாரம் பெங்களூரு-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் முற்றிலும் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்களுக்கு எதிராக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று அதிகாலையில்பெண் மருத்துவரை கற்பழித்து கொன்ற நான்கு பேரும் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.

கொலை எப்படி நடந்தது என செய்து காட்டுவதற்காக கொலையாளிகளை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது நான்கு பேரும் தப்பி ஓட முயன்றதால் போலீசார் அவர்களை சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேரும் உயிரிழந்தனர். இதுகுறித்து கூறியிருக்கும் பெண் மருத்துவரின் தந்தை, தனது மகளின் ஆத்மா தற்போது சாந்தி அடைந்திருக்கும் என கூறியுள்ளார்.

பெண் மருத்துவர் கொடூரமாக கொல்லப்பட்ட அதே இடத்தில் நான்கு பேரும் மரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.