பள்ளிக்குள் புகுந்து பள்ளி தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. நிலப்பிரச்சனை காரணமாக இந்த கொலை நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூர் அக்ரஹாரா தாசரஹல்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ரங்கநாத் (63) என்பவருக்கு சொந்தமானது இந்த பள்ளியில் தலைவராக இருந்து வருகிறார். 

பள்ளியில் சில பணிகளை மேற்கொள்வதற்காக, ரங்கநாத் நேற்று பள்ளிக்கு வந்திருந்தார். அப்போது ஊழியர்ளும் பள்ளிக்கு வந்தனர். நேற்று காலை 10 மணியளவில், தனது அறையில் ரங்கநாத் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, பள்ளிக்குள் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளனர். ரங்கநாத் அறைக்கு சென்ற அவர்கள், மறைத்து வைத்தருந்த கத்தியால், அவரை சரமாரியாக குத்தனார்கள். 

இதில் ரங்கநாத் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அங்கேயே இறந்து போனார். அவரைத் தாக்கிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். ரங்கநாத்-ன் அலறல் சத்தம் கேட்ட ஊழியர்கள் அங்கு வந்தபோது, ரத்த வெள்ளத்தில் பிணமாக இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி, போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரங்கநாத் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ரங்கநாத் கொலை செய்யப்பட்டது குறித்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பள்ளியையொட்டி உள்ள கங்கம்மா என்பவருக்கும், ரங்கநாத்துக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பான வழக்கில், ரங்கநாத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. ஆனாலும், கங்கம்மாவின் மகன்கள் இது குறித்து ரங்கநாத்துடன் சண்டை போட்டு வந்துள்ளனர். இந்த நிலையில்தான் பள்ளிக்கு வந்த ரங்கநாத்தை அவர்கள் கொலை செய்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டுள்ள ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.