மருதமலை சினிமா பாணியில், சென்னையில் ஒரு நிஜ சம்பவம் நடந்துள்ளது. கைதி ஒருவர் காபி குடிக்க வேண்டும் என்று கேட்டதற்கு நடிகர் வடிவேலு சப்போர்ட் செய்து காபி கடைக்கு அழைத்து செல்வார். ஆனால், நடிகர் அர்ஜுன் அதற்கு மறுப்பு தெரிவிப்பார். பாவம், காபி குடிக்கத்தானே கேட்கிறார் என்று கைதியை கடைக்கு அழைத்து செல்வார்கள். அப்போது, அவர்களிடம் இருந்து அந்த கைதி தப்பித்து சென்று விடுவார். இந்த காட்சி அனைவராலும் ரசிக்கப்பட்டது. இதேபோன்று ஒரு நிஜ சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. தப்பிச்சென்ற கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை காசிமேடு விநாயகபுரத்தை சேர்ந்தவர் பாபு என்ற பல்சர்பாபு(வயது 38). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பல்சர் பைக்கில் சென்று வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்ததால் பல்சர் பாபு என்ற அடைமொழி வந்தது. 

சென்னை, காசிமேடு பகுதியைச் சேர்ந்வர் பாபு (எ) பல்சர் பாபு (38). இவர் வழிப்பறி மற்றும் கொள்ளை ஆகியவற்றில் பாபு தொடர்புடையவர். பல்சர் பைக்கில் சென்று வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததால் பல்சர் பாபு அழைப்பார்களாம். வழிப்பறி கேசில் கைது செய்யப்பட்ட பாபு மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து பாபு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில், மூல நோயால் பாபு அவதிபட்டதாகவும், இதற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிக்சைக்காக சேர்த்துள்ளனர். 

பாதுகாப்பு பணிக்காக கஜேந்திரன், சுந்தர் ஆகிய 2 போலீசார் பணியில் இருந்தனர். நேற்று காலை சுமார் 6 மணியளவில், டீ குடிக்க வேண்டும் என்று பாபு, போலீசாரிடம கூறியுள்ளான். அதற்கு போலீசார் வெளியில் அழைத்து செல்ல மறுத்துள்ளனர். ஆனாலும், போலீசாரிடம் பாபு கெஞ்சி கேட்டதால், மோட்டார் பைக்கில் இரு போலீசாருக்கும் நடுவே பாபுவை உட்கார வைத்து அழைத்து சென்றனர். டீ கடைக்கு வந்த போலீசார், பைக்கில் சாவியை எடுக்காமலேயே அப்படியே 3 பேரும் கடைக்குள் சென்று விட்டனர். 

வாய் கொப்பளிப்பதுபோல், வெளியே வந்த பல்சர்பாபு, போலீசார் பார்க்காத நேரத்தில், சாவியுடன் இருந்த பைக்கில் ஏறி, அதில் இருந்த துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு தப்பி சென்று விட்டார். இதனைக் கண்ட போலீசார் கஜேந்திரன், சுந்தர் ஆகிய இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். கைதி தப்பித்து சென்று விட்டதை, அவர்கள் இருவரும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து முத்தியால்பேட்டை போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் கஜேந்திரன், சுந்தர் ஆகியோரிடமும் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.