கடலூர் அருகே 5 மாத கர்ப்பிணியை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரதா என்ற இளம்பெண் தமது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து ஜெகன் என்பவருடன் வாழ்ந்து வந்தார். தற்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், படம் பார்ப்பதற்காக திரையரங்கத்திற்கு ஜெகனும், ஜெயப்பிரதாவும் சென்றுள்ளனர். 

அப்போது, திருப்பாப்புலியூர் மார்க்கெட் தெருவை சேர்ந்த பிரசாந்த், ராஜமுத்து, முனுசாமி, பிரபாகரன் ஆகிய 4 பேர், அந்த பெண்ணை கேலி செய்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட ஜெகனையும் தாக்கியுள்ளனர். இதனால், கடும் கோபமடைந்த அந்த பெண் செருப்பை எடுத்து காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 4 பேரும், 5 மாத கர்ப்பிணியான ஜெயப்பிரதாவை காரில் கடத்தி சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, ஆள்கடத்தல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.