பொள்ளாச்சி ஆபாச வீடியோ  சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் தலைவனாக செயல்பட்ட திருநாவுக்கரசு எம்.பி.ஏ. பட்டதாரி.  வசதியான குடும்பம், சொகுசு கார், பண்ணை தோட்டம் என ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இவர் கல்லூரியில் படிக்கும்போதே காதல் மன்னனாக வலம் வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் நெருங்கிய தோழி  ஒருவர் மூலம் சில இளம் பெண்களிடம் பழக்கம் ஏற்பட்டது. பணம், அழகு , சரளமான ஆங்கிலம் என திருநாவுக்கரசு, மாணவிகள்  மற்றும் இளம்பெண்களை மயக்கி காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். 

அதுபோன்று அவரது நண்பரான சபரிராஜனும் தனது பேச்சுத்திறமையால் ஏராளமான இளம் பெண்களை மயக்கி, திருநாவுக்கரசுவின் சொகுசு காரில் சுற்றுலா மையங்களுக்கு அழைத்து சென்று உள்ளார். பின்னர் அங்குள்ள மறைவான இடத்துக்கு சென்று சில்மிஷத்தில் ஈடுபடும்போது அதை மறைந்து இருந்து திருநாவுக்கரசு உள்பட மற்ற 3 பேரும் வீடியோ எடுப்பார்கள்.

பின்னர் அந்த வீடியோவை வைத்து அந்த மாணவிகள் மற்றும் இளம்பெண்களை திருநாவுக்கரசு மிரட்டி தனது பண்ணை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில்  திருநாவுக்கரசு இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட அவருடன் படித்த  அந்த தோழி ஒருவர் தான்  உடந்தையாக இருந்துள்ளார்.அந்த பெண் மூலம் தான் அவர் ஏராளமான இளம்பெண்களின் செல்போன் எண்களை பெற்று உள்ளார். 

தற்போது அந்த பெண் யார் என்பது குறித்த தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளது என்றும் . அதை வைத்து நாங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.