பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய பார் நாகராஜ்க்கு சொந்தமான மதுபான பாரை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி நகராட்சி 34-வது வார்டு அதிமுக அம்மா பேரவை செயலாளராக பதவி வகித்தவர் பார் நாகராஜ். டாஸ்மாக் பாரை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருவதால் இவருக்கு பார் நாகராஜ் என்ற பட்டப்பெயர் வந்தது. பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் நண்பர் தான் இந்த பார் நாகராஜ். கடந்த 27-ம் தேதி திருநாவுக்கரசால் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரரை தாக்கிய வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் மறுநாளே ஜாமீனில் வெளியே விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து உடனே அதிமுக அடிப்பட்ட உறுப்பினர் பதவியில் இருந்து பார் நாகராஜ் அதிரடியாக நீக்கப்பட்டார். 

இவன் பொள்ளாச்சியில் டாஸ்மாக் பார் ஒன்றை நடத்தி வருகிறான். மேலும் இவர் கட்டப்பஞ்சாயத்து, பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் பார் நாகராஜ்க்கு சொந்தமான மதுபான பாரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். மது அருந்திக் கொண்டிருந்தவர்களை வெளியேற்றி விட்டு சூறையாடத் தொடங்கினர். இருக்கைகள், மேசைகள் அனைத்தும் வீசி எறிந்த அவர்கள், குளிர்சாதனப் பெட்டியையும் நொறுக்கினர். 

இதைக் கண்ட மதுக்கடை ஊழியர்கள், உடனடியாக கடையை இழுத்து மூடினர். பின்னர், இளைஞர்களும், பொதுமக்களும், பார் நாகராஜை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.