நடிகர் வடிவேல், இசையமைப்பாளர் தேவாவிற்கு போலி டாக்டா் பட்டம் .! தலைமறைவான ஹரீஷை அதிரடியாக கைது செய்த போலீஸ்
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், போலி டாக்டர் பட்டம் கொடுத்த விவகாரத்தில், சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் என்ற அமைப்பின் இயக்குனர் ஹரிஷ் தலைமறைவாக இருந்த நிலையில் ஆம்பூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
போலி டாக்டர் பட்டம்
சென்னையைச் சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 26ம் தேதி விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. அப்போது இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் உள்ளிட்ட பலருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கத்தை அந்த அமைப்பினர் வாடகைக்கு எடுத்து முனைவர் பட்டம் வழங்கியுள்ளனர். அண்ணாபல்கலைக்கழகத்தில் வைத்து முனைவர் பட்டம் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனியார் அமைப்பிற்கு அரங்கம் வாடகைக்கு விடப்படாத நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பரிந்துரை கடிதம் தந்ததாக கூறி பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி கோரப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் தெரிவித்திருந்தார்.
ஆம்பூரில் ஹரீஸ் கைது
இதே போல ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகத்திடம் அண்ணாபல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளதாக அந்த அமைப்பினர் பொய்யான தகவல் அளித்ததாக தெரிகிறது. இதனையடுத்து அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், கையெழுத்து தவறாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன.
இதனையடுத்து சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் இயக்குனரான ராஜு ஹரிஷ் என்பவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வந்த நிலையில், ஹரீஸ் தலைமறைவாக இருந்து வந்தார். இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று காலை ஹரீஷை ஆம்பூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தொடருமா..? செங்கோட்டையன் கூறிய பரபரப்பு தகவல்