தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த வாரம் பெங்களூரு-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் முற்றிலும் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் அவர்  கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட 48 மணி நேரத்தில் நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது விசாரணை நடந்து வந்தது. இன்று அதிகாலையில்  சம்பவம் எவ்வாறு நடந்தது என்பதை அறிவதற்காக குற்றவாளிகளை கொலை நடந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது தப்பி ஓட முயன்ற அவர்களை போலீசார் சுட்டதில் நான்கு பேரும் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் இது தொடர்பாக காவல்துறை தற்போது விளக்கமளித்துள்ளது. போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்த குற்றவாளிகள், அவர்களை சுட முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், நான்கு பேரையும் சரணடைய கூறியுள்ளனர். ஆனால் அதை மறுத்த குற்றவாளிகள் கற்களை கொண்டு தாக்கி இருக்கின்றனர். அப்போதும் அமைதி காத்த போலீசார் மீண்டும் சரணடையுமாறு எச்சரித்துள்ளனர்.

தொடர்ந்து குற்றவாளிகள் தப்பி ஓட முயலவே வேறு வழியின்றி காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டிருக்கின்றனர். இதில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதிகாலை 5.45 மணியில் இருந்து 6.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.