கோவையில் கோயில் அருகே வெடித்த கார்...! சதி செயல் காரணமா..? போலீசார் தீவிர விசாரணை
கோவை உக்கடம் பகுதியில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயில் அருகே வெடித்த கார்
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியிலுள்ள சங்கமேஸ்வரர் திருக்கோவில் அருகே இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த மாருதி காரில் கேஸ் கசிவின் காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் அருகில் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து நான்கு புறமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைத்துள்ள போலீசார் அங்கு செல்ல பத்திரிகையாளர்கள் உட்பட யாரும் செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
சதி செயல் காரணமா..?
இது விபத்தா அல்லது அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழ்த்தும் நடவடிக்கையா என்ற கோணத்தில் தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் இந்த பகுதிக்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 200 மீட்டருக்கு மேலே இந்த சாலையில் யாரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. காரில் சிலிண்டர் வெடித்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக ஆணிகள், சிறுவர்கள் விளையாடக்கூடிக கோழி குண்டு, பால்ரஸ் குண்டுகள் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் வெடித்து சிதறிய கார் உரிமையாளரான பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கார் விற்பனை செய்யப்பட்டதாக பிரபாகரன் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கார் டீலரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
தடவியல போலீசார் சோதனை
இதனையடுத்து ஏ டி ஜி பி தாமரை கண்ணன் தற்பொழுது சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், காலை நான்கு மணி அளவில் மாருதி 800 காரில் சிலிண்டர் வெடித்துள்ளது. விபத்து நடந்த அருகாமையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
காவல்துறை உயர் அதிகாரிகள் தடவியல் நிபுணர்கள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். காரில் வந்தவரின் உடல் முற்றிலுமாக கருகிவிட்டது. எனவே இறந்தது யார் என்ற விபரம் தெரியவில்லை. எனவே தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலைக்குள் முழு விவரம் தெரியப்படுத்தப்படும் என கூறினார்.
விபத்து பகுதியில் பாஜக நிர்வாகிகள்
கார் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு வந்த பாஜகவின் கோவை மாவ்ட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, விபத்து தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் கோவில் அருகில் சம்பவம் நடந்தால் இந்து முண்ணனி நிர்வாகிகள் அந்த பகுதியில் அதிகளவு கூடியுள்னர். அவர்களை போலீசார் அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
திடீரென வெடித்த சிலிண்டர்..! இரண்டாக உடைந்த கார்...! துடி துடித்து ஒருவர் பலி