தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பாராளுமன்றத்திலும் இதுகுறித்து எம்பிக்கள் கடுமையான கருத்துகளை தெரிவித்திருந்தனர். பெண் மருத்துவர் சடலம் கண்டெடுக்கப்பட்ட 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த நிலையில் பெண் மருத்துவரை எவ்வாறு கொன்றனர் என்று நடித்து காட்டுவதற்காக, குற்றவாளிகளை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிய அவர்கள், தப்பி ஓட முயன்றுள்ளனர்.

இதனால் வேறு வழியின்றி குற்றவாளிகளை போலீசார் சுட்டனர். இதில் நான்கு பேரும் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் உயிரிழந்தனர். இந்த என்கவுண்டர் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். அங்கு அவர்கள் போலீசாரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர். 'போலீஸ் வாழ்க ' என்றும் 'டி.சி.பி' மற்றும் 'ஏ.சி.பி' வாழ்க எனவும் கோஷங்களை எழுப்பி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காவல்துறை அதிகாரிகள் சிலரை தோளில் தூக்கி இளைஞர்கள் உற்சாகமடைந்தனர்.

மேலும் காவலர்கள் மீது ரோஜா பூக்களை தூவிய மக்கள், இனிப்பு வழங்கி கொண்டாடினர்.