மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொலை செய்த மென்பொறியாளர், தனது குடும்ப வாட்ஸ் அப் குருப்பில் மன்னிப்பு கோரிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் சுமித் குமார். சாப்ட்வேர் இஞ்சினியரான இவர், இந்திராபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி அன்சு பாலா, 5 வயது மகன் ப்ரத்மேஷ், நான்கு வயது இரட்டை குழந்தைகளான ஆரவ், ஆக்ரிதி ஆகியோருடன் வசித்து வந்தார்.

 

இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து மனைவி மற்றும் 3 குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து, பின்னர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். தனது குடும்ப வாட்ஸ் அப் குரூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசிய சுமித் குமார் தனது குடும்பத்தினரை கொலை செய்துவிட்டேன், இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், சயனைடு சாப்பிட்டுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்’’ என அவர் அதிர வைத்துள்ளார். 

இந்த வீடியோவை முதலில் பார்த்த சுமித் குமாரின் தங்கை, இது தொடர்பாக சுமித்தின் மனைவியான அன்சு பாலாவின் சகோதரர் பன்கஜ் சிங்கிற்கு தகவலளித்துள்ளார். குடியிருப்புக்கு சென்று பார்த்த பன்கஜ் கதவை திறக்க முடியாததால் காவல்துறையினருக்கு தகவல் கூறியுள்ளார்.

பின்னர் காவல்துறையினர் வந்து கதவை உடைத்து பார்த்த போது அன்சு மற்றும் குழந்தைகள் மூவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் தலைமறைவான சுமித் குமாரை தேடி வருகின்றனர்.

குருகிராம், நொய்டா போன்ற பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணியாற்றினார். கடந்த 2018 அக்டோபரில் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு கடந்த டிசம்பரில் ராஜினாமா செய்தார். அப்போதிலிருந்தே வறுமையில் வாடிய சுமித் தனது குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் திணறியுள்ளார். இதனால் அவரது குடும்பத்திற்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த சுமித் குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுள்ளார்.