சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணை கொலை செய்து விட்டு அதே ரயிலில் தப்பி சென்ற கொலையாளிகள் - ஓபிஎஸ் ஆவேசம்
சென்னை மாநகரத்தின் மையப் பகுதியாகவும், எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகவும் விளங்கும் சைதாபேட்டை இரயில் நிலையத்தில் நடந்த கொலையை செய்தவர், அதே ரயிலில் ஏறி தப்பித்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை
சென்னை மின்சார ரயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வருபவர் மீனம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, நேற்று இரவு எழும்பூரில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் ராஜேஷ்வரி பழம் மற்றும் சமோசா வியாபாரம் செய்து வந்துள்ளார். மின்சார ரயில் நேற்று இரவு 8.30 மணியளவில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது அதே ரயிலில் இருந்து பயணம் செய்த 4 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கொடூரமாக அரிவாளால் தாக்கி கொலை செய்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ரயிலில் தப்பி சென்ற கொலையாளிகள்
இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில், கடற்கரை – தாம்பரம் புறநகர் இரயிலில் பயணித்து வந்த பழ வியாபாரம் செய்யும் பெண்மணி இராஜேஸ்வரி என்பவர் சைதாப்பேட்டை இரயில் நிலையத்தில் இறங்கியபோது மர்ம நபரால் சரமாரியாக வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. உயிரிழந்த இராஜேஸ்வரி அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொலைநகரமாகும் தலைநகரம்
சென்னை மாநகரத்தின் மையப் பகுதியாகவும், எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகவும் விளங்கும் சைதாபேட்டை இரயில் நிலையத்தில் இந்தப் படுகொலை நடைபெற்றுள்ளதும், இந்த வெறிச் செயலைச் செய்தவர் அதே இரயிலில் ஏறி தப்பித்துள்ளதையும் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் சுதந்திரமாக மக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதும், சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதும் தெளிவாகிறது. தலைநகரம் கொலை நகரமாக மாறியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்த பழ வியாபாரியின் குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்றும், கொலையாளியை விரைந்து கண்டுபிடித்து, சட்டத்தின் முன்நிறுத்தி, தண்டனைப் பெற்றுத் தர வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இதையும் படியுங்கள்
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் அலறிய பயணிகள்.. அரிவாளால் வெட்டப்பட்ட பெண் உயிரிழப்பு?