குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் தங்கி படித்து வந்த தனது இரண்டு மகள்களான லோப முத்ரா சர்மா மற்றும் நந்திதா சர்மா ஆகியோரை மீட்டுத் தரக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில், ஜனார்த்தன சர்மா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு புகாரும் அளிக்கப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், காணாமல் போன இளம்பெண்கள் இருவருக்கும் உரிய பாதுகாப்பு அளித்து டிசம்பர் 10-ந்தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறினர். பின்னர் குஜராத் போலீசார், பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சோதனை நடத்தி பெண்களை மீட்டனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் ஹீராபூரில் உள்ள பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த நித்யானந்தா ஆசிரமம் மூடப்பட்டது.

இந்தநிலையில், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதை ‘கைலாசா நாடு’ என நித்யானந்தா பிரகடனம் செய்துள்ளார்.

அந்நாட்டிற்கான மொழி, கொடி, சின்னம் உள்ளிட்ட அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் குடியேற விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் பிரதமராக நித்யானந்தா இருப்பார் அவரின் கீழ் 10 துறைகள் இருக்கும் என்று அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் நித்யானந்தா அந்த நாட்டுக்கு பிரதமராக தனக்கு நெருக்கமான நடிகை நியமிக்க திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அவருடன் நெருக்கமாக உள்ள, ‘அம்மா’ என சீடர்களால் அழைக்கப்படும், அந்த நடிகைதான் கைலாசா நாட்டின் பிரதமர் என்கிறார்கள்.

‘கைலாசா’வை தனி நாடாக அறிவிப்பதற்காக ஐ.நா சபையிடம் விண்ணப்பிக்க உள்ளதாகவும், இதற்கான பொறுப்பு அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பி செல்லவில்லை. அவர் உள்நாட்டிலேயே இமயமலை பகுதியில் பதுங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அவரது சமீபத்திய வீடியோக்கள் அனைத்தும், இமயமலை பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்றும், அவை கர்நாடகாவின் பிடதி ஆசிரமத்தில் இருந்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன எனவும் கண்டுபிடித்துள்ளனர்.

அகமதாபாத்தை சேர்ந்த 3 பெரும் தொழிலதிபர்கள் நித்யானந்தாவின் நாட்டை உருவாக்கும் பணிகளுக்கான செலவுகளை செய்துள்ளார்கள். இந்த நாட்டில் குடிமகன்களாக நித்யானந்தாவின் தீவிர பக்தராக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதியாக உள்ளது. இந்த நாட்டின் ஆட்சி மொழிகளாக ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் மூன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓஷோ சாமியாருக்கு சொந்தமாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருப்பதை போல தனி நாட்டை உருவாக்க நித்யானந்தா திட்டமிட்டு இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.