திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இருக்கிறது பட்டைய கவுண்டன்புதூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் லட்சுமணன். ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பண்ணைப்பட்டியைச் சேர்ந்த பிரம்மசாமி என்பவரின் மகள் முத்து லட்சுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் பொங்கலுக்காக முத்து லட்சுமி தந்தை வீட்டிற்கு வந்துள்ளார்.

நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கிறார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி துடித்தனர். அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் முத்து லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். திருமணம் நடந்ததில் இருந்து லட்சுமணன் வீட்டில் வரதட்சணை கொடுமை செய்ததாக தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக முத்துலட்சுமியின் சகோதரர் பிரகாஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதில், லட்சுமணன் குடும்பத்தார் 2 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை கொண்டுவந்ததால் கணவனுடன் சேர்ந்து வாழ முடியும் என முத்துலெட்சுமியை கொடுமை செய்ததாகவும் அதற்கு லட்சுமணனும் உடந்தையாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார். அதன்காரணமாகவே முத்துலட்சுமி மன வேதனையில் தற்கொலை செய்துள்ளார் என குற்றம் சாற்றியிருக்கிறார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: தனியாக கழண்டு ஓடிய சொகுசு பேருந்து டயர்..! பயங்கர அதிர்ச்சியுடன் உயிர் தப்பிய பயணிகள்..!