கடலூர் மாவட்டம் மீராலூர் அருகே இருக்கிறது சாத்தப்பாடி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சத்தியவதி. இந்த தம்பதியினருக்கு அட்சயா(6), நந்தினி(5), தர்ஷினி(2) என 3 மகள்கள் இருந்துள்ளனர். மணிகண்டன் அளவுக்கு அதிகமான மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வரும் அவரால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கணவர் மீது மனைவி சத்தியவதி வெறுப்பில் இருந்தார்.

இந்நிலையில் வழக்கம் போல குடித்துவிட்டு வந்த சண்டையிட்ட கணவரிடம் கோபித்து கொண்டு தனது மகள்களை அழைத்து கீழமணக்குடியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்திருக்கிறார். பேருந்தில் சென்று கொண்டிருந்த அவர் மீராலூர் அருகே இறங்கி மகளுடன் கடைக்கு சென்றுள்ளார். அங்கே அவர்களுக்கு தின்பண்டம் வாங்கி கொடுத்துவிட்டு அருகே இருக்கும் கால்வாய்க்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு திடீரென தனது மூன்று மகள்களையும் சத்தியவதி கால்வாயில் தூக்கி வீசியதாக தெரிகிறது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கால்வாயில் வீசப்பட்ட அட்சயா மற்றும் நந்தினி ஆகியோரை உயிரிழந்த நிலையில் மீட்டனர். 2 வயதேயான சிறுமி தர்ஷினியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சத்தியவதியை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.