தமிழகத்தின் சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் சி.வி.சண்முகம். இவரது இல்லம்  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் அமைந்துள்ளது. சி.வி.சண்முகத்தின் தங்கை வள்ளி கடந்தத 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

வள்ளியின் மகன் லோகேஷ். தனது  தங்கை மகன் என்றாலும் லோகேஷை, சண்முகம் அவரை தனது மகன்போலவே நடத்தி வந்தார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் லோகேஷ் E.E.E எஞ்சினியரிங் படித்து முடித்தார்.

மேல்படிப்பிற்காக அவர் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றார். 6 ஆண்டுகள் படிக்க வேண்டிய மேல் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சில மாதங்களுக்கு முன்னர் சண்முகத்தின் வீட்டிற்கு வந்துள்ளார்.

வழக்கமாக சண்முகம் லோகேஷுடன் காலை உணவு உண்ணும் வழக்கம் கொண்டவர். நேற்றும் அதேபோன்று அவருடன் சாப்பிட்டுள்ளார். அதன் பின்னர் விக்ரவாண்டி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டார். 

காலை உணவு முடித்த பின்னர் லோகேஷ் தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். மதியம் 3:30 மணியாகியும் லோகேஷ் கீழே இறங்கி வரவில்லை. வீட்டில் இருந்தவர்கள் கதவை தட்டி பார்த்தும் அவர் வெளியே வரவில்லை. இதனால் பயந்துபோன அவருடைய உறவினர்கள் சண்முகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

உடனடியாக அவர் காவல் அதிகாரிகளை கதவை உடைத்து உள்ளே நுழைந்து செல்ல கூறியுள்ளார். அப்போது லோகேஷ் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சண்முகத்தின் வீட்டிற்கு விரைந்து வந்தனர்.

லோக்கேஷின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லோகேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை அறிவதற்காக அவருடைய செல்போனில் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன் விபத்தில் சிக்கி காயமடைந்து சில மாதங்களாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.