செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியில் தொழிலதிபர் ராமநாதன் என்பவர் போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் இப்படி நடந்து கொண்டதாக பின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

செங்குன்றம் மொண்டி அம்மன் நகர் கம்பர் தெருவை சேர்ந்தவர்  ராமநாதன் என்கின்ற துப்பாக்கி ராமநாதன் (52). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருவதுடன்.  அகில இந்திய இந்து மகாசபை தலைவராகவும் இருந்துவருகிறார். பாடியநல்லூர் பஸ் நிலையம் அருகே அவருக்கு சொந்தமான காலிமனை ஒன்று உள்ளது.நேற்றிரவு அந்த காலிமனையில், ஆயுதப்படையில் காவலராக பணி புரியும் சோலையப்பன் நகரைச் சார்ந்த வெற்றிவேல் (30) அவரது நண்பர்களுடன் குழுவாக நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமநாதன், அவர்களைபார்த்து,  யார் நீங்கள்,  எதற்காக இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்டுள்ளார், அதற்கு, ”அதை கேட்க நீங்கள் யார்” என்று காவலர் வெற்றிவேல் திருப்பி கேட்டதாக தெரிகிறது. உடனே இடத்தை காலிசெய்யாவிட்டால் சுட்டு கொன்று விடுவேன் என்று  மிரட்டியுள்ளார் ராமநான். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த காவலரும் அவரது நண்பர்களும்.

 

ஆயுதப்படை காவலரான எங்களையே  சுட்டுவிடுவாயா என்று பதிலுக்கு கேட்க. உடனே காரில் இருந்த துப்பாக்கியை எடுத்த ராமநாதன் அருகில் இருந்த  பாறாங்கல்லில் மூன்று ரவுண்டு சுட்டு போறி கிளப்பினார். பின்னர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் பறத்துவிட்டார் ராமநாதன். அதை கண்டு ஒரு கணம் ஆடிப்போன காவலரும் அவரது நண்பர்களும் நடந்த சம்பவம் குறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராக்களின் பதிவான காட்சிக்களை வைத்து ராமநாதனை தேடிவந்தனர். இந் நிலையில் ராமநாதன் வீட்டில் இருப்பதை அறிந்து அங்கு விரைந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். 

பின்னர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில் , நேற்றிரவு குடிபோதையில் இருந்ததால் அப்படி நடந்து கொண்டதாக தெரிவித்தார்.துப்பாக்கிக்கான  உரிமத்தை கர்நாடக மாநிலம் மைசூரில் பெற்றதாகவும் விசாரணையில் அவர் கூறினார். இச் சம்பவம் தொடர்பாக  விசாரணை செய்துவரும் செங்குன்றம் காவல் ஆய்வாளர் ஜவஹர் பீட்டர். தொழிலதிபர் ராமநாதன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ததுடன், ராமநாதனுக்கு வேறு ஏதாவது குற்றச் சம்பவர்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.