பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவராமனுக்கு புரோக்கர் மூலம் அவரது பெற்றோர்கள்  வால்பாறையைச் சேர்ந்த மல்டிலிகா என்பவரை பெண் பார்த்துள்ளனர். அப்போது பெண் வீட்டார் சிவராமனுக்கு  திருமணம் செய்து வைக்க சம்மதித்தனர். மேலும் உடனடியாக திருமணத்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

மேலும் திருமணத்துக்காக மாப்பிள்ளை  வீட்டில் இருந்து பெண்ணின் குடும்பத்துக்கு 12 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது.

பெண் பார்க்க சென்ற சிவராமன் திருமணமாகி மனைவியுடன் மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் தனது வீட்டிற்கு வந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். மேலும் அவர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

புதுமண தம்பதிகள் தேனிலவுக்கு செல்ல ஊட்டி, கொடைக்கானலை தேர்வு செய்தனர். இந்நிலையில் திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் வாந்தி எடுத்தார். இதைப்பார்த்த புதுமாப்பிள்ளை புட் பாய்சன் என்று நினைத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மனைவியை அழைத்து சென்றார்.

அங்கு புதுப்பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர்கள் 2 மாத கர்ப்பிணியாக இருப்பதாக அவரது கணவரிடம் தெரிவித்தனர். திருமணமான 4 நாளில் 2 மாத கர்ப்பமா? என்று அதிர்ச்சி அடைந்த கணவர் இதுபற்றி மனைவியிடம் கேட்டார். ஆனால் அவர் பதில் கூறவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் மீண்டும் மனைவியை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அப்போது சிவராமனின்  பெற்றோர் பரிசோதனைக்கு சென்றீர்களே, அங்கு என்ன சொன்னார்கள் என்று கேட்டனர். அதற்கு சிவராமன்  எந்த பதிலும் அளிக்கவில்லை. தொடர்ந்து குடும்பத்தினர் வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் தனது மனைவி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்று தெரிவித்தார். இதனை கேட்டு குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பெண் கிடைக்காததால் அவசர கதியில் விசாரிக்காமல் திருமணம் செய்து கொண்டோமே என்று விரக்தி அடைந்த சிவராமன்  பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். 

பெண்ணின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும், அதை மறைத்து எனக்கு 2-வதாக அந்த பெண்ணை திருமணம் செய்து கொடுத்ததும் தெரியவந்தது. 

எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்..